செய்தியாளர்: காளிராஜன்.த
இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் செலுத்தாமல் செல்போன்களில் மூழ்கி கிடக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் மாவட்டம் தோறும் அனைத்து பள்ளி மாணவர்களையும் ஒன்றிணைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மாவட்டம் தோறும் மைதானங்கள் உருவாக்கப்பட்டு விளையாட்டுக்கு தனி பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியைச் சேர்ந்த ரதிஷ் பாண்டியன் என்பவர் திண்டுக்கல் பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பள்ளிக் கல்வித் துறை அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27.09.24 அன்று பள்ளிக் கல்வித் துறை அளித்துள்ள பதிலில்...
# திண்டுக்கல் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்டத்தில் 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
# இந்தப் பள்ளிகளில், 140 பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன. 30 பள்ளிகளில் மைதானங்கள் இல்லை.
# குறிப்பாக 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லை
என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# மேலும், மைதானங்கள் இருக்கும் சில பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாமலும், மைதானங்கள் இல்லாத பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், 15 கல்வி வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில்,
1) ஆத்தூர் - 12
2) வத்தலகுண்டு - 11
3) திண்டுக்கல் நகரம் - 9
4) திண்டுக்கல் கிராமம் - 4
5) குஜிலியம்பாறை - 8
6) கொடைக்கானல் - 10
7) நத்தம் - 22
8) நிலக்கோட்டை - 11
9) ஒட்டன்சத்திரம் - 12
10) பழனி கிராமம் - 8
11) ரெட்டியார்சத்திரம் - 11
12) சாணார்பட்டி - 13
13) தொப்பம்பட்டி - 13
14) வடமதுரை - 12
15) வேடசந்தூர் - 14
ஆகிய எண்ணிக்கைகளில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 93 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்பது மாணவர்களுக்கிடையே விளையாட்டை மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 50 சதவீதம் கூட உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்பது வருத்தம் அளிப்தோடு, அரசுப் பள்ளிகளில் நல்ல விளையாட்டு வீரர்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.