2016-17ஆம் நிதியாண்டில் பத்திரப்பதிவுத் துறையில் தமிழக அரசுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
சட்டபேரவையில் பத்திரப்பதிவு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 2012-13ஆம் ஆண்டில் பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு 7 ஆயிரத்து 455 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. பின்னர் 2013 -14 ஆம் நிதியாண்டிலிருந்து தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு படிப்படியாக இந்தத்துறையில் அரசின் வருவாய் அதிகரித்துள்ளது. அதாவது, 2013 -14ல் 8 ஆயிரத்து 55 கோடியும், 2014-15ல் 8 ஆயிரத்து 279 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் உச்சமாக, 2015-16ஆம் நிதியாண்டில், பத்திரப்பதிவுத் துறையில் அரசுக்கு 8 ஆயிரத்து 562 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டில் பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பத்திரப்பதிவுத் துறை மூலமாக அரசுக்கு 7 ஆயிரத்து 7 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்தது. அதாவது, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேபோல், இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் மட்டும், பத்திரப் பதிவுத்துறை மூலமாக அரசுக்கு 628 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.