தார் கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தாரின் விலை குறைந்த போதும் தமிழக நெடுஞ்சாலைத்துறை 2014ஆம் ஆண்டின் விலையிலேயே தார் கொள்முதல் செய்ததால், 800 கோடி ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக சமூக ஆர்வலர் பாலாஜி என்பவர் பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். 41 மண்டலங்களில் ஒரு இடத்தில் மட்டும் ஊழல் குறித்து விசாரணை நடைபெறுவதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தார் விலை மாறுபாடு காரணமாக ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 519 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், சாலை அமைப்பதில் ஊழல் நடைபெற்றது எனக் கூறுவது தவறான தகவல் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தார் கொள்முதல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றம் நடைபெறவில்லை என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை முடிவில் தான் குற்றம் நடந்ததா, இல்லையா என்பது தெரியவரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தார் கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.