உயர் வகுப்பினருக்கான ரூ.8லட்சம் உச்சவரம்பு சரியானதே - மத்திய அரசு குழு
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு, ஆண்டு வருமான உச்ச வரம்பு , எட்டு லட்ச ரூபாய் என்ற விதிமுறை பொருத்தமானது தான் என மத்திய அரசு அமைத்த குழு தெரிவித்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, ஒப்புதல் அளித்து அதற்கான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு எதிராக மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் போது, வருமான உச்ச வரம்பு, எட்டு லட்ச ரூபாய் என்பதை எதன் அடிப்படையில் நிர்ணயித்தீர்கள் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மறு ஆய்வு செய்யவும் அறிவுறுத்தியது. அதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, வருமான உச்ச வரம்பை மறு ஆய்வு செய்ய குழு அமைத்தது.
இந்தக் குழு தனது அறிக்கையை தற்போது சமர்ப்பித்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினரை தீர்மானிக்க, எட்டு லட்ச ரூபாய் ஆண்டு வருமான உச்சவரம்பு நடைமுறையைத் தொடரலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்சம், ஐந்து ஏக்கர் விவசாய நிலம் அல்லது அதற்கு மேல் நிலப்பரப்பை வைத்திருக்கும் நபர்களை, இந்தப் பயனை அனுபவிப்பதிலிருந்து நீக்க வேண்டும் என்றும், குடியிருப்பு சொத்து மதிப்பு முற்றிலும் அகற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகளை அடுத்த மாணவர் சேர்க்கை அறிவிக்கையின் போது நடைமுறைபடுத்தலாம் எனவும், நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும், குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளது.