"உங்கள் வீட்டில் புதையல் இருக்கிறது"- தம்பதியிடம் ரூ.5 லட்சம் பறித்த ஜோதிடர்

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியிடம் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி 5.60 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி... பிடிக்கச் சென்றபோது தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பறிமுதல்  செய்யப்பட்ட ஜோதிடர் கார்
பறிமுதல் செய்யப்பட்ட ஜோதிடர் கார் புதிய தலைமுறை
Published on

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள  பொங்கலூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி  புவனேஸ்வரி. இவர் மேட்டூர் அருகே உள்ள  கொளத்தூரைச்  சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது முருகேசன் வீட்டுக்குள் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுக்கச் சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ஜோதிடர் மாதேஸ்வரன் 5.60 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார்.

அதன் பிறகு முருகேசனின்  செல்போன் அழைப்புகளை  மாதேஸ்வரன் தவிர்த்து வந்துள்ளார். பணம் கொடுத்து ஒரு மாதம் கடந்தும் ஜோதிடர் புதையலை எடுத்துத் தராததால் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கத் திட்டம் போட்டுள்ளனர் தம்பதியர்.

 இதனையடுத்து புவனேஸ்வரியின் உறவினர் மேரிக்கு திருமணம் ஆகவில்லை. அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஜோதிடர் மாதேஸ்வரனை அழைத்துள்ளனர். அப்போது ஜோதிடர்  மாதேஸ்வரன் மேட்டூர் காவிரியில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றும் அதற்காக மேட்டூர் வரும்படி தெரிவித்துள்ளார்.

அதன்படி மேரி, புவனேஸ்வரி அவரது கணவர் முருகேசன் மற்றும் அவருடைய உறவினர்கள்  தங்களுடைய வாகனத்தில் மேட்டூர் வந்தனர். ஜோதிடர் கூறிய இடத்தில் மேரியும்,  அவருடைய உறவினரும் நின்றுள்ளனர். மற்றவர்கள் மறைந்து கொண்டு நின்றுள்ளனர்.

பறிமுதல்  செய்யப்பட்ட ஜோதிடர் கார்
நீச்சல் பழகச் சென்ற தம்பதியர் பரிதாபமாக உயிரிழப்பு - நாமக்கல்லில் சோகம்

இதனைத்தொடர்ந்து அங்கு அதிமுக கொடிகட்டிய  சொகுசு காரில் அதிமுக 3-வது வார்டு செயலாளர் என்று எழுதப்பட்டு பலகை பொருத்தப்பட்ட கார் ஒன்று வந்துள்ளது.  அதிலிருந்து இறங்கிய மாதேஸ்வரன், மேரி உள்ளிட்ட இருவரையும் காருக்குள் அழைத்துள்ளார். இருவரும்  காரில்  ஏறியதும் அங்கு மறைந்திருந்த மற்றவர்கள் ஓடி வந்து காரை மறித்துள்ளனர்.

இதனால், சுதாரித்துக் கொண்ட மாதேஸ்வரன்  தனது காரை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது காரின் கதவு மோதியதில் கீழே விழுந்து காயமடைந்தார் முதியவர். அதேநேரத்தில் முருகேசன் மற்றும்  அவருடைய  உறவினர்கள் காரை பின் தொடர்ந்து சென்றனர்.

பறிமுதல்  செய்யப்பட்ட ஜோதிடர் கார்
வளர்ப்பு நாய் கடித்து 8 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – உத்தரப்பிரதேசத்தில் சோகம்

அப்போது அந்த சாலை வழியாக மின்வாரிய பணிமனை ஊழியர்கள் பணி முடிந்து கூட்டமாக வெளியே வந்து கொண்டிருந்தனர். இதனால் ஜோதிடர் மாதேஸ்வரன் காரை வேகமாக இயக்க முடியாமல் காரில் இருந்து இறங்கித் தப்பி ஓடிவிட்டார். காரில் இருந்த 2 பெண்களும் கீழே குதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார்  காரை மட்டும் கைப்பற்றி மேட்டூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஜோதிடர் மாதேஸ்வரனால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் சொந்த ஊர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி ஆலோசனை கூறி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

அ.தி.மு.க கொடியுடன் வலம் வந்த ஜோதிடர் மாதேஸ்வரன் கடந்த 2021-ஆம் ஆண்டு அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டவர் என அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி ஏமாற்றிய ஜோதிடரை நம்பி ரூபாய் 5 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com