செய்தியாளர்: நாராயணசாமி
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனை சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர், செந்தில்குமார் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.45 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரனையில், திருவள்ளூரில் இருந்து தனியார் வங்கிக்கு பணத்தை கொண்டு வந்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து வருமானவரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், வங்கி அலுவலர்களிடம் விசாரனை நடத்தினார். பின்னர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் துணை அலுவலரும், அரக்கோணம் வட்டாட்சியருமான செல்வி ரூ.45 லட்சத்தை அரக்கோணம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தார்.