தமிழகத்தில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக முறையாக மின் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
தெருவிளக்கு உள்ளிட்டவற்றிற்காகவும், தங்களுடைய அலுவலகத்திற்காகவும் மின்சாரத்தை பயன்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள், இதுவரை 300 கோடி ரூபாய் மின் கட்டணத்தை நிலுவை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் கடும் நிதிச் சுமையில் தவித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் முறையாக மின்கட்டணத்தை செலுத்துவதில்லை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்பட 12 மாநாகராட்சிகள் இதுவரை 109 கோடி ரூபாய் மின் கட்டணத்தை நிலுவை வைத்துள்ளதாக கூறியுள்ளனர். 124 நகராட்சிகள் 55 கோடி ரூபாயும், 12 ஆயிரத்து 258 ஊராட்சி ஒன்றிய அமைப்புகள் 170 கோடி ரூபாயும் நிலுவை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்தால் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகள் படிப்படியாக மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.