உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 3 லட்சத்து 431 கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர் மாநாடு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மாநாட்டின் 2வது நாளான இன்று சிறு, குறுந்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தொழிற்துறையினருக்கு விளக்கும் கருத்தரங்குகள் நடைபெற்றன. மேலும் தொழிற்துறை பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகளின் சந்திப்பும் நடைபெற்றது.
ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தொழிற் துறையினருக்கு என சிறப்பு கருத்தரங்குகளும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள முதலமைச்சர், “இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3,00,431 கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.