புளியந்தோப்பு குழந்தை மரணம் - நடந்தது என்ன? லஞ்சம் பெறப்பட்டதா? டீன், அமைச்சர் கொடுக்கும் விளக்கம்!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு, டிசம்பர் 6ஆம் தேதி வீட்டிலேயே குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் தந்தை
குழந்தையின் தந்தைpt web
Published on

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு, மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழையின் தாக்கத்தால் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் கிடைக்காத நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி வீட்டிலேயே குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், வெகுநேரம் போராடி புளியந்தோப்பில் உள்ள G3 மருத்துவமனைக்கு தாயையும், குழந்தையையும் கொண்டு சென்றுள்ளனர். அந்த மருத்துவமனை பூட்டப்பட்டிருந்த நிலையில் சிசு இறந்தது. இதைத் தொடர்ந்து தாய்க்கு சிகிச்சையளிக்க காவல்துறையினர் உதவியுடன் அருகிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தை சுத்தம் செய்யப்பட்ட நிலையில் தாயிற்கு உரிய சிகிச்சை வழங்க எழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தையை பிணவறையில் வைத்துவிடுமாறு அங்கிருந்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்துள்ளனர்.

குழந்தையின் தந்தை
உரிய நேரத்தில் கிடைக்காத சிகிச்சை..இறந்து பிறந்த சிசு; துணிகூட சுற்றாமல் கொடுத்த அவலம்-நடந்தது என்ன?

மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்ட சிசுவின் உடல் திரும்ப மசூதிடம் ஒப்படைக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2500 ரூபாய் பணம் கேட்கப்பட்டதாக முதலில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மசூத் the news minute செய்தி நிறுவனத்திடம் அளித்திருந்த பேட்டியில், “மருத்துவமனையில் இருக்கும் காவல்நிலையத்தில் கேட்டபோது எங்கள் பகுதி காவல்நிலையத்தில் இருந்து கடிதம் வாங்கி வர சொல்லுகின்றனர். கடிதம் வாங்கிக் கொடுத்தாலும் குழந்தையை எடுத்துச் செல்ல சொல்லுகின்றனர். குழந்தையை எடுத்துச் சென்று நான் என்ன செய்ய போகின்றேன். நீங்களே தகனம் செய்துவிடுங்கள் என சொன்னால் அதற்கும் பணம் கேட்கின்றனர். இல்லையென்றால் குழந்தையை எடுத்துச் செல்லுமாறு சொல்கின்றனர். இதை காவல்துறையினர் சொல்லவில்லை. பிணவறையில் இருப்பவர்கள் சொல்கின்றனர்” என தெரிவித்திருந்தார்.

பின்னர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலையீட்டிற்குப் பிறகு, குழந்தையின் உடல் டிசம்பர் 10 ஆம் தேதியன்று மசூத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதிலும் குழந்தையை துணி கூட சுற்றாமல் கொடுத்தனர். இதனால் மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய மசூத், “2500 ரூபாய் பணம் கேட்டது பொய் செய்தி. யாரும் பணம் எல்லாம் கேட்கவில்லை. வெளியில் உடலை வாங்க வந்த ஒருவர் குடிபோதையில் சொல்லியுள்ளார். நான், அவரை அங்கு வேலை செய்பவர் என நினைத்தேன். உள்ளிருப்பவர்கள், வேலை செய்பவர்கள் யாரும் பணம் கேட்கவில்லை. காவல்துறையினர் நன்றாக உதவி செய்தனர்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக மருத்துவமனை டீன் முத்துச்செல்வன் நேற்று அளித்திருந்த பேட்டியிலொ, “வீட்டிலேயே குழந்தையை இறந்த நிலையில் பெற்றெடுத்து தாயும் சேயும் 6/12/23 அன்று மருத்துவமனையில் உள்நோயளியாக அனுமதிக்கப்பட்டனர். குழந்தை நல மருத்துவர் குழந்தையின் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தை இறந்ததை உறுதி செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை அறையில் வைத்தார்கள். காவல்துறையின் விசாரணைக்குப் பின் குழந்தை இயற்கை முறையில் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை ஏதும் தேவையில்லை என்ற கருத்தின் அடிப்படையில் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தோம்.

அப்படி ஒப்படைக்கும் போது விதிகளுக்கு முரணாக அட்டைப்பெட்டியில் வைத்து பிணவறை உதவியாளர் குழந்தையை ஒப்படைத்தது எனக்கு தெரியவந்த உடன், சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரையின் படியும், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆலோசனை படியும், பிணவறை உதவியாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. உண்மை நிலைகளின் படி விதிகளுக்கு ஏற்ப மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காத படி, தீவிர கண்காணிப்பை செய்யச்சொல்லி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து செய்வோம். 2500 ரூபாய் கேட்டது தொடர்பாகவும் விசாரணைக் குழு அமைத்துள்ளோம். விசாரணையின் முடிவில்தான் உண்மையான நிலவரம் தெரியும். அதற்குத் தகுந்த அரசு விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்திருந்தார்.

இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த பொறியாளர் என்.எச்.சரவணன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் குழந்தையின் உரிமை பாதுக்காக்கப்படவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை டீன் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு இழப்பீடு வழங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டுமென புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “புயல் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் மனைவிக்கு சுயமாக பிரசவம் பார்க்க முயன்றிருக்கிறார்கள். குழந்தையை வெளியில் எடுப்பதற்கு ஏராளமான முயற்சியை மேற்கொண்டு, குழந்தை கர்ப்பப்பையிலேயே இறந்துள்ளது. அதன்பின்பே தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள். அங்கு முடியாது என சொன்னதும் இங்கு வந்துள்ளார்கள்.

சிசுவை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்ததுதான் பெரிய தவறு. மற்றபடி துணி சுற்றி கொடுத்தேன் என சொல்கிறார்கள். எது உண்மை என விசாரிக்கவேண்டும். பெட்டியில் வைத்து எடுத்து வந்தது மழைக்கு பாதுகாப்பு என மருத்துவர்கள் சொன்னாலும் கூட அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அதன் காரணமாகதான் பணியாளர் ஒருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.

கருவில் இறந்தே பிறந்த குழந்தை ஒரு பெண் குழந்தை என்பதாலும் எதாவது சந்தேகம் இருக்கும் என்பதாலும் துணி சுற்றி விட்டுத்தான் கொடுத்துள்ளனர். ஆகவே அது குறித்து விசாரிக்க சொல்லியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com