அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 35,000 குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளில் மக்களை சரியாக குடியேற்றாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மதுரை புதூரில் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு உதவிகளை வழங்கிய பின்னர், சிப்காட் தொழில் நிறுவன பிரதிநிதிகள் உடன் ஊரக தொழில்துறை மற்றும் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தினார். அப்போது வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஊரக தொழில்துறை செயலாளர் சிஜி தாமஸ், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் பேசிய அமைச்சர் அன்பரசன், “குடிசை மாற்று வாரிய துறையின் சார்பில் தேனி, மதுரை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்தோம். கடந்த அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம் கீழ் இயங்கிய குடிசை மாற்று வாரிய துறை சார்பில் தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும் 2011 ஆம் ஆண்டு 47 கோடி ரூபாய் மதிப்பில், 35 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வைகை ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இடமாற்றம் செய்யும் நோக்கத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், இதுவரை மக்களை அங்கு குடியேற்றாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டன. எனவே, வீடில்லாத, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை தேர்வு செய்து அந்த வீடுகளில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த வீடுகளில் குடியிருக்க விரும்பும் மக்களுக்கு, பயனாளரின் பங்கு தொகையையும் வங்கிக்கடன் மூலம் செலுத்த அரசே ஏற்பாடு செய்யும்.
தமிழகம் முழுவதும் பயன்படுத்தாத நிலையில் உள்ள வீடுகளை புதுப்பித்து மீண்டும் வீட்டின் உரிமையாளர்களுக்கே கொடுக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த ஆட்சியில் இது போன்ற பணிகளில் கவனம் செலுத்தாமல், ஒரு சில ஒப்பந்ததாரர்கள் பயன் பெறுவதற்காகவே குடிசை மாற்று வாரியத்தில் 2,500 கோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளன. சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தாமதம் செய்யும் வங்கிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வங்கி மேலாளர்களை அழைத்து பேசி விரைவுபடுத்த உத்தரவிட்டு உள்ளோம்.
சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்குவதில் சிக்கல் எதிர்கொண்டால், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் துவங்க ஊக்குவித்து வருகிறோம்” என தெரிவித்தனர்