அனல் மின்நிலையத்தில் ரூ.2.75 கோடி பொருட்கள் திருட்டு!

அனல் மின்நிலையத்தில் ரூ.2.75 கோடி பொருட்கள் திருட்டு!
அனல் மின்நிலையத்தில் ரூ.2.75 கோடி பொருட்கள் திருட்டு!
Published on

திருவள்ளூர் அனல் மின் நிலையத்தில் ரூ.2.75 கோடி மதிப்பிலான உதிரி பாகங்கள் திருட்டு என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் 1500 மெகா வாட் திறன் கொண்ட 3 பிரிவுகளில் நிலக்கரி எரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக தயாரிக்கப்படும் மின்சாரத்தில், 3 பங்கு தமிழகத்திற்கும் மற்றவை பிரித்தும் அனுப்பப்படுகிறது. 3 பிரிவுகளிலும் தலா 500 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவையான உதிரி பாகங்கள் அவ்வப்போது பழுதாகி விடுவதால், அடிக்கடி இயந்திரங்கள் பழுதாகி மின் உற்பத்தி தடைப்படும்.

இந்த அனல் மின் நிலையத்தை பொறுத்த வரை கடலோரத்தில் உள்ளதால் தீவிரவாத அச்சுறுத்தல்களில் இருந்து காக்க, மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் இரவு-பகல் பாராமல், துப்பாக்கி ஏந்தி காவலுக்கு உள்ளனர். இந்த நிலையில் தான், இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் காற்றாடி உள்ளிட்ட உதிரி பாகங்கள் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து அனல் மின் நிலைய கிடங்கு மேலாளர் மல்லிகார்ஜுனா, ரூ.2.75 கோடி மதிப்பிலான உதிரி பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின், பாதுகாப்பையும் மீறி எப்படி கோடிக்கணக்கான உதிரி பாகங்கள் கொள்ளை போனது என்பதை கண்டறிய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(தகவல்கள் : எழில், புதிய தலைமுறை செய்தியாளர், திருவள்ளூர்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com