திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டுக் கடன், தனிநபர் கடன் தருவதாக கூறி மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் கடந்த மாதத்தில் எஸ்.இ.பி., மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களை அணுகிய அந்த நிதி நிறுவனத்தார், தனி நபர் கடன், வியாபாரக் கடன், வீடு கட்ட கடன் என அனைத்து விதமான கடன்களும் வழங்கப்படும் என்றும், மாத தவணையாக சிறுக சிறுக கட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனையடுத்து திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம், ஈக்காடு, தண்ணீர்குளம், ராமாபுரம், புட்லூர், எடப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுயசுதவிக்குழுவினர் ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டியுள்ளனர்.
கிட்டத்தட்ட 40 குழுக்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலுத்திய நிலையில் அவர்களுக்கு வங்கியில் பணம் வரவு வைக்கப்படும் என கூறியுள்ளனர். இதனையடுத்து காக்களூரில் உள்ள நிதி நிறுவனத்திற்கு அவர்கள் வந்துள்ளனர். ஆனால் நிதி நிறுவனத்தின் பெயர் போர்டு கீழே போடப்பட்டு, அலுவலகம் பூட்டியிருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிதி நிறுவனத்தை நடத்தியவர்கள் தலைமறைவானது அறிந்ததும், பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு அனைத்து விதமான கடன்களும் வழங்கப்படும் என அறிவித்து அதன் மூலம் கட்டிய ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தெரியவந்தது. அதில் வேலை பார்த்து வந்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.