ரூ.1,600 கோடி மோசடி வழக்கு: ஆருத்ரா கோல்டு இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

ரூ.1,600 கோடி மோசடி வழக்கு: ஆருத்ரா கோல்டு இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
ரூ.1,600 கோடி மோசடி வழக்கு: ஆருத்ரா கோல்டு இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
Published on

வட்டி தராமல் 1,600 கோடி ரூபாயை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் 1,678 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறிய நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் வட்டியை தராமல் மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நிர்வாக இயக்குநர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், வங்கி கணக்குகள் முடக்கத்தால்தான் பணத்தை திருப்பித்தர இயவில்லை என்றும், பணத்தை திருப்பித் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து 5 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி இளந்திரையன், டெப்பாசிட் தாரர்களுக்கு பணத்தை திருப்பி அளித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அனைத்து ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள், கிளை பொறுப்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் தினம்தோறும் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி முதலீட்டாளர்களின் தகவல்களோடு ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு போலிசாரிடம் மனுதாரர்கள் அனைவரும் இணைந்து 50 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தார்.

பின்னர் இந்த வழக்குகளில் காவல்துறை தரப்பில், விண்ணப்பித்தவர்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக நிறுவன இயக்குநர்கள் காவல்துறை முன்பு ஆஜராகவில்லை எனவும் 50 கோடி ரூபாய் டெபாசிட் பணத்தையும் செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குநர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதில் முதற்கட்டமாக முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், அதன்பின்னர் 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு அடுத்த கட்டமாக முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com