திமுக முப்பெரும் விழா செப் 15 சென்னை அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சி, கரூரிலும் காணொளி காட்சி வாயிலாக நடத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி நடத்தப்படும்போது 250 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிக்கத்தக்க பொற்கிழி வழங்கப்பட இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருக்கிறார்.
கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுவது தொடர்பான திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “சென்னையில் செப்டம்பர் 15 ம் தேதி திமுக முப்பெரும் விழா காணொளி காட்சியாக நடைபெறுகிறது. இதையொட்டி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் திமுக மூத்த முன்னோடிகள் 250 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிக்கத்தக்க பொற்கிழி வழங்கப்பட உள்ளது” என்றார்.
தொடர்ந்து மின்துறை நடப்பு நிகழ்வுகள் குறித்து அவர் பேசுகையில், “மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்துக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் இதுவரை வந்துள்ளன. அதில் 97 விழுக்காடு தீர்வு காணப்பட்டுள்ளது. மின்வாரிய புகார்களுக்கு பல தொலைபேசி எண்கள் இருந்தன. ஆனால் இப்போது ஒரே எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எளிதாக மின் தொடர்பான புகார்களை எளிதில் பதிவு செய்து தீர்வு காணப்படுகிறது.
நிகழ்வாண்டில் இலவசம், தட்கால், சுயநிதி என ஒரு லட்சம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட வாரியாக கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு வஞ்சிக்கப்பட்ட மின் இணைப்புகள் இந்த ஆட்சியில் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.