பிரபல ரவுடியின் தம்பி திருமணத்தில் மணமகன் தலையை வெட்டி எடுத்து பழிக்குப் பழியாக கொலை செய்ய ரவுடி கும்பல் திட்டம் மிட்ட காரணத்தால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சோமமங்கலம் நடுவீரபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி லெனின். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் உள்ளது. அதேபோல் இவரது தம்பி நரேஷ்பாபு என்ற ஆலன் ஜான்சன் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள லீலாவதி அரங்கத்தில் நரேஷ்பாபுக்கும் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த காலின் ஹேனா செரின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இவர்களின் எதிரியான மேத்யூ, சச்சின் என்ற ரவுடி தற்போது (தலைமறைவாக உள்ளனர்) கடந்த ஆண்டு இவர்களுக்கும் லெனின் கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் லெனின் தரப்பினர் மேத்யூவின் நண்பர் அபிஷேக் என்பவரின் தலையை வெட்டிக் கொலை செய்தனர்.
இதற்கு பழிக்குப் பழியாக ’லெனின் தம்பி நரேஷ்பாபு தலையை திருமணத்தன்று வெட்டி எடுத்து அபிஷேக் தலை கிடந்த அதே இடத்தில் வைப்போம்’ என ரவுடி மேத்யூ கூட்டாளிகள் சபதமிட்டுள்ளனர். இந்த தகவல் தாம்பரம் சரக கிரைம் போலீசாருக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மேத்யூ கூட்டாளிகள் அருவா, கத்தி, போன்ற ஆயுதங்களுடன் மாறு வேடத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நேற்றே பதுங்கி விட்டதாக போலீசாருக்கு கூடுதல் தகவலும் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில் திருமணம் நடக்கும் இடத்தில் இருதரப்பு ரவுடிகளால் சண்டை ஏற்பட்டு கொலை சம்பவங்கள் நடப்பதை தடுக்க ரவுடிகளை முழங்காலுக்கு கீழ் சுட்டுப்பிடிக்கும் உத்தரவுடன் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கைத் துப்பாக்கியுடன் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து போலீசார் இ.சி.ஆர் வழியில் வரும் அனைத்து வாகனங்களையும் சோதணை செய்து உள்ளே அனுப்பினர்
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறைவுற்று நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பாதுகாப்புடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.