ராஜபாளையம் அருகே கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உறவினரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ரவுடி குட்டி மாடசாமி உடலை தோண்டி எடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரைச் சேர்ந்தவர் குட்டி மாடசாமி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி என 13 வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி, சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் குடிபோதையில் இவரது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு தகராறு முற்றிய நிலையில் சுப்புலட்சுமியை, மாடசாமி அரிவாளால் தாக்கி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சுப்புலட்சுமியின் சகோதரர் விஜயகுமார் என்பவர் மாடசாமியை தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது மாடசாமிக்கும், விஜயகுமாருக்கும் ஏற்பட்ட தகராறில் மாடசாமியை, விஜயகுமார் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மாடசாமியின் உடலை எடுத்துச் சென்ற விஜயகுமார், அருகே உள்ள புத்தூர் மலை அடிவார பகுதியில் யாருக்கும் தெரியாமல் குழி தோண்டி புதைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கணவர் குறித்து அக்கம் பக்கத்தினர் கேட்டபோது, அவர் வெளியூரில் பணியாற்றி வருவதாகக் கூறிய சுப்புலட்சுமி, சமாளித்து வந்துள்ளர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாடசாமியின் சகோதரி ராஜேஸ்வரி என்பவர், தான் மாடசாமியிடம் கொடுத்த ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் குறித்து சுப்புலட்சுமியிடம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ராஜேஸ்வரி சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மாடசாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து கொலை செய்த விஜயகுமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சுப்புலட்சுமியை காவல் துறையினர் கைது செய்தனர். இன்று பகலில் மாடசாமி உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு விஜயகுமார் அழைத்து வரப்பட்டார். அவர் அடையாளம் காட்டிய இடத்தில் வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், அரசு மருத்துவர் அருண் மற்றும் வருவாயத் துறையினர் முன்னிலையில் புதைக்கப்பட்ட மாடசாமியின் சடலம் எலும்புக் கூடாக மீட்கப்பட்டது.
சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு, முக்கிய பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சேத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான மாடசாமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் சொக்கநாதன் புத்தூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.