சென்னை நீலாங்கரை அருகே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடியிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்கின்றனர். அப்போது தப்பியோடிய அந்த ரவுடி, பதுக்கி வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை வைத்து போலீஸை சுடுகிறார். போலீஸாரை நோக்கி 2 தோட்டாக்கள் பாய்கின்றன. அதே நேரத்தில் தற்காப்புக்காக 2 தோட்டாக்களை சுடுகிறார் போலீஸ் அதிகாரி ஒருவர். இதில், ஒரு தோட்டா மார்பையும், மற்றொரு தோட்டா மேல் வயிறு பகுதியிலும் துளைக்க ரவுடியின் உயிர் பிரிகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் சீசிங் ராஜாவிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என காவல்துறை இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா, இன்று என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் முக்கிய ரவுடியாக சீசிங் ராஜா உருமாறியது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஆந்திராவைப் பூர்வீகமாகக்கொண்ட நரசிம்மன் – அங்கம்மா தம்பதிக்கு பிறந்தவர்தான் பிற்காலத்தில் சீசிங் ராஜா எனும் பிரபல ரவுடியாக மாறிய ராஜா. சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்துவந்த ராஜா, 9-ம் வகுப்புவரை படித்துவிட்டு கராத்தே மேல் கொண்ட ஆர்வத்தில் அதில் அடிமுறைகளை முறையாக கற்றுள்ளார். தொடர் பயிற்சிகளுக்குப் பிறகு கராத்தே மாஸ்டராக மாறியவர், துவக்கத்தில் நண்பர்களுக்காக அடிதடி போன்ற பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வாகனக் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கத் துவங்கியுள்ளார் ராஜா. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை அடாவடியாக பறிமுதல் செய்வதுதான் இவரது பணி. ஒரு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்யும்போது, சீஸ் செய்து கொண்டுபோனதாக சொல்வோம் அல்லவா.. அப்படி, கடனை திருப்பித்தராதவர்களின் வாகனங்களை இவர் பறிமுதல் செய்ததால் பெற்ற பெயர்தான் சீசிங் ராஜா.
அப்போதே தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கோலோச்சிய பிரபல ரௌடியுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ராஜா, மாமூல் வசூலிப்பது, ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து செய்வது என ரவுடிகளின் சாம்ராஜ்ஜியத்துக்குள்ளும் நுழைந்துள்ளார். இதன் நீட்சியாக ஆந்திராவில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய நபராக அறியப்பட்டார் சிசிங் ராஜா.
தொடர்ந்து, முக்கிய ரவுடியாக உருவெடுத்த இவர், சென்னை மற்றும் ஆந்திராவில் கொலை செய்து கூலிப்படை தலைவனாகவும் மாறியுள்ளார். இதற்கிடையே, போலீசாரின் நெருக்கடி காரணமாக ஆந்திராவில் இருக்கும் தனது மனைவி வீட்டில் பதுங்கியபடியே, சென்னையில் பல்வேறு குற்ற செயல்களை அரங்கேற்றி வந்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக கூலிப்படை தலைவனாக உருவெடுத்த சீசிங் ராஜா, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் பதித்து சிங்கம் பட பாணியில் ஆட்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டும் செயலிலும் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில்தான், தமிழகத்தையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் இவருக்கு தொடர்பிருப்பதாக கூறி போலீஸார் அவரை தேடி வந்தனர். அப்படி, ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை நேற்று கைது செய்த போலீஸார், இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள், ஆட்கடத்தல் உட்பட 32க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த இவர், ஐந்து முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைதானது குறிப்பிடத்தக்கது.