ரவுடி படப்பை குணாவை வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு

ரவுடி படப்பை குணாவை வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
ரவுடி படப்பை குணாவை வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
Published on

பிரபல ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (எ) படப்பை குணா.  ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, சிறு-குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்களை மிரட்டி பணம்பறிப்பது போன்ற பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல் நிலையங்களில் புகார் உள்ளது.

மேலும் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உட்பட 42 வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி படப்பை குணா தொடர்ந்து தலைமறைவாக இருந்ததுகொண்டே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் ரவுடி படப்பை குணா உள்ளிட்ட ரவுடிகளைப் பிடிக்க என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்டான டி.எஸ்.பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படை சமீபத்தில் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே குணாவின் மனைவி  எல்லம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், தனது கணவர் குணா சரணடைய தயாராக உள்ள நிலையில், அவரை காவல்துறை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டமில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், படப்பை குணா சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவார் எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை குணா இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து சரணடைந்த ரவுடி படப்பை குணாவை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க 17வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் இருந்து பூந்தமல்லி கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அடுத்தப்படியாக நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி படப்பை குணாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்மைகளை காவல்துறை விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com