இந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..!

இந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..!
இந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..!
Published on

விமானம் மூலம் இந்தியா வந்து, பின்னர் ரயிலில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு மீண்டும் வெளிநாட்டிற்கே திரும்பிச் செல்வதை வாடிக்கையாக கொண்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ரயில் ஏசி வகுப்புகளில் தொடர்ச்சியாக நகைகள் திருட்டு போகும் சம்பவம் அரங்கேறி வந்தது. தொடர் திருட்டு புகார் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்தது. இதனையடுத்து ரயிலில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் கொள்ளையனைப் பிடிக்க, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் டிஐஜி பாலகிருஷ்ணன் கண்காணிப்பில் இன்ஸ்பெக்டர் தாமஸ்  ஜேசுதாசன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை, ரயில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகின. பிடிப்பட்ட நபர் சாகுல் ஹமீது (29) என்பதும், அவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

சாகுல் ஹமீது குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு விமானம் மூலம் வந்து ரயில் ஏசி பெட்டிகளில் முன்பதிவு செய்து அடிக்கடி பயணிப்பதும் தெரியவந்தது. அவ்வாறு பயணிக்கும்போது, தூங்கிக் கொண்டிருக்கும் பெணிகளிடம் இருந்து நகைகளை திருடுவதும், கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இந்தச் சம்பவத்தில் சாகுல் ஹமீது ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

திருட்டு நகைகளை திருச்சூர், மும்பை நகைக்கடைகளில் விற்று பணமாக்கி, பின்னர் விமானம் மூலம் வெளிநாட்டிற்கே திரும்புவதையும் சாகுல் வாடிக்கையாக கொண்டுள்ளார். அத்துடன் இந்தத் திருட்டு பணம் மூலம் மலேசியாவில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஹோட்டலில் இயக்குநராக இருப்பதும் தெரியவந்தது. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கெனவே சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டவர். அத்துடன் வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாக பலபேரை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.

தற்போது சாகுல் ஹமீதிடம் இருந்து 110 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் போலீஸ் காவல் நிறைவடைந்து, சால் ஹமீது இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  பல வழக்குகளில் தொடர்புடைய நபரை பொறிவைத்து பிடித்த தனிப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com