ஆவடி அடுத்த பொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், திருமுல்லைவாயல் செந்தில் நகர் பிருந்தாவன் அவன்யூ பகுதியில் நகை கடை ஜூவல்லரி நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சுதந்திர தினத்தன்று ரமேஷ் குமார் கடையில் தனியாக அமர்ந்து வியாபாரத்தை கவனித்து கொண்டு இருந்துள்ளர், அப்பொழுது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை கத்தியால் வெட்டி, கயிற்றால் கட்டி போட்டு 51 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றதாக கூறப்பட்டது.
சுரேஷ் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடைபெற்ற இடத்தில் துணை ஆணையர் ஐமன் ஜமால் நேரில் ஆய்வு மேற்கொண்டு, திருமுல்லைவாயல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கொள்ளையர்கள் ஆந்திர மாநிலம் வழியாக தப்பி சென்றது அறிந்த போலீசார் ஒவ்வொரு மாநிலங்களாக துப்புத் துலக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதி தேடுதலை ராஜஸ்தானுக்கு எடுத்துச்சென்றனர். கடந்த 5 நாட்களாக ராஜஸ்தான் மாநிலம் பீவர் பிப்லாஜ் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். அங்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு பதுங்கி இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம் பீவர் கிராமத்தைச் சேர்ந்த ஹர்சத் குமார் பாட் (39), சுரேந்தர் சிங் (35) என தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் குமாரின் நண்பர்கள் என்பதும், சுதந்திர தினம் விடுமுறை என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் பெரியதாக இருக்காது எனவும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் இருப்பதால் பிடிபடாமல் விரைவாக தப்பி செல்ல முடியும் என ரமேஷ் குமார் கூறியதை அடுத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
இதன் பின்னர் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தான் அதிக அளவிலான கடனில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அப்பகுதி மக்கள் தீபாவளி பண்டிகைக்காக நகை சீட்டு போட்டுள்ளனர். அவர்களுக்கு நகை மற்றும் பரிசு பொருட்கள் தர முடியாமல் இருந்ததால் இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் குமாரை கைது செய்த திருமுல்லைவாயல் போலீசார் அவர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவாரசியமாக கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் போலியானது எனவும் கவரிங் நகைகள் என்பதும் தெரியவந்துள்ளது.