சாலையோரங்களில் சிம்கார்டு விற்பனை செய்வதையும், வணிக நிறுவனங்களில் வணிக வரித்துறையினர் டெஸ்ட் பர்சேஸ் செய்யும் முறையையும் ரத்து செய்யக் கோரி வரும் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே செல்போன் உதிரிபாக மொத்த விற்பனை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய கடையை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, சாலை ஓரங்களில் சிம் கார்டு விற்பனை செய்வதன் மூலம் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதால் அதனை தடை செய்ய வேண்டும். ஆன் லைன் வர்த்தகத்தில் பெரும் நிறுவனங்களால் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு அதிகளவு நடைபெறுகிறது, இதனை மத்திய அரசு கண்காணித்து அதனை தடை செய்ய வேண்டும். மற்றும் வணிக நிறுவனங்களில் டெஸ்ட் பர்சேஸ் முறையை அடியோடு ரத்து செய்ய கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் வரும் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும் தற்பொழுது மக்களிடையே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மற்றும் ரீபைனரி ஆயில்களை தவிர்த்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய கடலை எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். இது விவசாயிகளுக்கும் நல்ல பலன் அளிப்பதோடு உடல் நலத்துக்கும் தீங்கு ஏற்படுத்தாது எனவும் தெரிவித்தார்.