எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் காவல்துறை உடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி தற்போதைய தொண்டாமத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராவார்.
இவர், கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தின் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது, மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்து - தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.
மாநகராட்சிகளுக்கு மின் விளக்குகள் மற்றும் மின்சாதன உதிரி பாகங்களை ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்து வந்த 'கணேஷ் டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்தில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் திருச்சி தெப்பக்குளம் நுழைவு வாயில் அடுத்த மேலரண் சாலையில் (W.E.B ரோடு) அமைந்துள்ளது. இங்கும் திருச்சி திருவானைக்காவலிலும் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அரியலூர் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் மேலரண் சாலையில் சோதனை நடைபெற்று வருகிறது. திருவானைக்காவல் கணபதி நகர் பகுதியில் ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையில் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய ஒரு ஏஜென்சி நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
போலவே வெள்ளவேடு அருகே படூர் பகுதியில் உள்ள ஜேசிபி இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் சோதனை நடைபெறுகிறது. எஸ்பி வேலுமணியுடன் தொடர்புடைய அந்த நிறுவனத்தில், 6 பேர் கொண்ட குழுவினர் ரெய்டு செய்து வருகின்றனர்.
இதனால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றி சென்னையில் 10 இடங்களிலும், கோயம்பத்தூரில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் ஆகமொத்தம் 26 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொண்டர்கள் அதிக அளவில் குவிவதை தடுக்கும் விதமாக எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு வரும் இணைப்புச் சாலை களை காவல்துறையினர் அடுப்புகளை வைத்து மறைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதனால் காலையில் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்துவருகின்றனர். அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F2029733577212703%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>