ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட 2 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊராட்சி மன்றங்களுக்கான சாலை மேம்பாட்டு பணிகளுக்காக 2 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. இது ஊராட்சி மன்றம் மற்றும் கிராமசபைகளின் ஒப்புதல் இல்லாமலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜோதிமணி குமரேசன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மனுவில், ஊராட்சிமன்ற தீர்மானங்கள் இல்லாமலேயே தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலுவலர் மூலமாக தன்னிச்சையாக சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தேர்வு செய்து ஒப்புதல் அளித்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஊராட்சிகள் சுதந்திரமான முறையில் முடிவெடுத்து அவற்றை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்போதுதான் பஞ்சாயத்து ராஜ் முறை அங்கீகாரம் பெறும் எனக் கூறிய நீதிபதி, அரசியலமைப்பு சட்டத்தில் ஊராட்சிகளுக்கு தரப்பட்டுள்ள அதிகாரம் மூலம் நிதிக்குழுவின் திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநர் அறிவித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நீதிபதி, அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட கிராம சபைகள் கூடி முடிவெடுத்து பஞ்சாயத்துகளுக்கான நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.