திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாலை மறியல் வழக்கு தொடர்பான பிணை மனு இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக, திமுக பிரமுகர் நரேஷ் என்பவர் மீது அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். நரேஷின் சட்டையை கழற்றி, அரைநிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச்சென்று தாக்கினர்.
இதுகுறித்த புகாரில் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இதனிடையே ஜெயக்குமாரின் பிணை மனு சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவிய நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. வன்முறையை தூண்டும் வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருப்பதால் கொலை முயற்சி பிரிவும், தகவல் தொழில்நுட்ப பிரிவும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை சுட்டிக்காட்டும் குற்றமே நடக்காத போது எப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது என வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதனை சென்னை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் எனக்கூறி பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது ராயபுரத்தில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக மற்றொரு வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி தள்ளிவைத்தார் .