இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டெல்லி நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா கைது செய்யப்பட்டனர். டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கில் டெல்லி காவல்துறையினர் முதலில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் தடுப்புச்சட்டப்பிரிவின் கீழ் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, தரகர்கள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் மீதும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 21 ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்திற்கு வருகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அன்றைய தினம் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிடும் ஆர்.கே.நகரில் வரும் 21-ம் தேதிதான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.