ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக செலவின பார்வையாளர்கள் வரும் 23 ஆம் தேதி சென்னைக்கு வருகின்றனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. அங்கு சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக செலவின பார்வையாளர்கள் வரும் 23 ஆம் தேதி சென்னைக்கு வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியின் ஒவ்வொரு வேட்பாளரும் செய்த செலவு விவரங்களை பார்வையாளர்கள் ஏற்கனவே கணக்கிட்டு வைத்திருப்பார்கள். அந்த செலவும், வேட்பாளர் தாக்கல் செய்த கணக்கும் ஒத்து போகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். இந்த விவரங்களை இந்திய தேர்தல் கமிஷனிடம் செலவினப் பார்வையாளர்கள் சமர்பிப்பார்கள். உச்ச வரம்புக்கு மேலாக வேட்பாளர் செலவு செய்திருந்தால் அது குறித்து தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தும். உச்சவரம்பை தாண்டி செலவு செய்வது உறுதி செய்யப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு போட்டியிட தடையும், வெற்றி பெற்ற வேட்பாளர் என்றால் தகுதி இழப்பு செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது.