ராசிபுரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில் இருவேறு இடங்களில் அரசு கட்டடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு அருகே பெரிய கிணறு பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தண்ணீர் தொட்டி சமீபத்தில் கட்டப்பட்டது. அந்த தொட்டி இடிந்து விழுந்ததில் பாப்பாத்தி என்ற மூதாட்டி உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். தரமற்ற பொருட்களைக் கொண்டு தொட்டி கட்டியதே இந்த விபத்திற்கு காரணம் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக நாமகிரிபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரத்திடம் கேட்டதற்கு, ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்ட பணியில் இருந்து தண்ணீர் தொட்டி கட்டவில்லை என்றும், 5-வது வார்டு உறுப்பினர் ரம்யா என்பவரின் கணவர் முருகன், எந்த அனுமதியும் பெறாமல் இந்த தொட்டியைக் கட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் ஊராட்சியில் மேலராமன்சேத்தி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இடி விழுந்ததில், வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்தன. அதனால், 50-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பள்ளிக்கு அருகிலுள்ள வீட்டில் வைத்து பாடம் எடுக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட இந்த பள்ளி கட்டடங்களை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்ட அலுவலகம் உள்ளிட்டவை செயல்படும் கட்டடத்தின் ஒரு அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த சத்தம் கேட்டு மனு கொடுக்கவந்த மக்கள், அதிகாரிகள் அலறியடித்து ஓடினர். இடிந்து விழுந்த அறை பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டிருந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பழைய கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக அரசு கட்டும் கட்டடங்களின் தரத்தை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன.