காஞ்சிபுரம் கன்னிக்கோவில் மேடு இருளர் இன மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இன்று இரவுக்குள் அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர் என மதுராந்தகம் வட்டாட்சியர் கவுசல்யா உறுதி அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிகோவில்மேடு கிராமத்தில் இருளர் இன மக்களுக்காக 20 ஆண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில்தான் 50-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்தாண்டே தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையிலுள்ளதால், புதிய கட்டடங்கள் கட்டக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் நள்ளிரவில் தொகுப்பு வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிய அய்யம்மாள் என்ற மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த செய்தியை புதிய தலைமுறை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வந்தது. இதன் எதிரொலியாக காஞ்சிபுரம் கன்னிக்கோவில் மேடு இருளர் இன மக்கள் இன்று இரவுக்குள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர் என மதுராந்தகம் வட்டாட்சியர் கவுசல்யா உறுதி அளித்துள்ளார். புதிய தலைமுறையிடம் பேசிய அவர், இருளர் இன மக்களுக்கு நிரந்தரமாக வேறு இடத்தில் வீடு கட்டித் தரப்படும் என்று தெரிவித்த அவர், பெரும்பேர் கண்டிகை என்ற இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.