"வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்" - ஸ்டாலின் வலியுறுத்தல்

"வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்" - ஸ்டாலின் வலியுறுத்தல்
"வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்" - ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில், “ சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள் உள்ள நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டு மக்களை வதைத்து வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. அதன் விளைவாக, பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் ரூ.90-ஐ கடந்துள்ளது.

சென்னையில் நேற்றைய விலையைவிட 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 18 காசுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. இரு சக்கர வாகனங்களைப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விலையேற்றம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும். அதுபோலவே, டீசல் விலையும் 28 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுக்கு விற்பனையாகிறது. சரக்குப் போக்குவரத்து - பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றுக்கு டீசல் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விலையேற்றம் உள்ளது.

மத்திய அரசின் டைனமிக் கொள்கையின் அடிப்படையில், சர்வதேசச் சந்தையின் விலை ஏற்ற - இறக்கத்திற்கேற்ப இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் - டீசல் விலையினை நிர்ணயிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம் மட்டும் காண்கிறதே தவிர, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாகக் குறைந்தாலும், இந்தியச் சந்தையில் பெட்ரோல் - டீசல் விலை குறைவதேயில்லை. மாறாக, உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த விலையேற்றக் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி சுத்திகரிப்புச் செலவுகளுக்கு மேல் மத்திய அரசின் கடுமையான வரி விதிப்பும், மாநில அரசு சார்பிலான வரி விதிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணமாகின்றன.

மாநில அரசுக்குச் சேர வேண்டிய வரிவருவாயை மத்திய பாஜக அரசு ஏற்கனவே பறித்துவிட்ட நிலையில், வரிகளின் வாயிலாக பெடரோல் - டீசல் விலையை உயர்த்தி பொதுமக்களையும் நேரடியாகத் துன்புறுத்தும் கொடுமைக்கு உடனே முற்றுப்புள்ளி வைத்திட வலியுறுத்துகிறேன். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என்கிற அச்சம் மக்களிடம் உள்ளது. அன்றாடத் தேவையாகிவிட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு வணிகம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்போது விலைவாசி கடுமையாக ஏறும். அதுவும் மக்கள் மீதே சுமையாகும்.

கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் எனும் நெருப்பு இன்னும் முழுமையாக அணையாத நிலையில், அதன் மீது விலையேற்றம் என்ற பெயரில் பெட்ரோல் ஊற்ற வேண்டாம். மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. அதனால் உடனடியாக பெட்ரோல் - டீசல் மீதான வரிகளைக் குறைத்து விலைக் குறைப்புக்கு வழி வகுத்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மாநில அரசுக்கும் இது பொருந்தும்!” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com