தென்காசி மாவட்டம், புளியரை கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி லாரி ஒன்று விபத்தில் சிக்கி தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்தது. அப்போது அவ்வழியாக வந்த ரயிலை சண்முகையா, வடக்குத்தியார் என்ற தம்பதி தண்டவாளத்தில் ஓடி சென்று டார்ச் லைட் மூலம் எச்சரிக்கை செய்து நிறுத்த செய்தனர்.
இந்த தம்பதியை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அத்தம்பதியை நேற்று நேரில் அழைத்த முதலமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் தொகையும் வெகுமதியாக மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதேபோல ரயில் விபத்தை தடுத்து நிறுத்தியமைக்கு, திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கி அவர்களை பாராட்டினார் அமைச்சர் உதயநிதி.
இதுதொடர்பான தன் பதிவில் அமைச்சர் உதயநிதி, “விபத்துக்குள்ளான லாரி கவிழ்ந்து கிடந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, டார்ச்லைட் அடித்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் தென்காசி பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான வயதில் முதிய தம்பதியினர் சண்முகையாவும் வடக்கத்தி அம்மாளும்!
இவர்கள் இருவரும் நொடிப்பொழுதில் சிந்தித்து துரிதமாகச் செயல்பட்டக் காரணத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர். இந்த தம்பதியின் துணிச்சலைப் பாராட்டி நமது முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கியுள்ளார்கள். இந்நிலையில், நமது திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி நாம் பாராட்டினோம். சண்முகையா - வடக்கத்தி அம்மாள் தம்பதியினரின் மனித நேயமும் - வீரமும் போற்றுதலுக்குரியவை. அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.