#FactCheck | இணையத்தில் பரவும் ரேவதி புகைப்படம்: உண்மை என்ன?

#FactCheck | இணையத்தில் பரவும் ரேவதி புகைப்படம்: உண்மை என்ன?
#FactCheck | இணையத்தில் பரவும் ரேவதி புகைப்படம்: உண்மை என்ன?
Published on

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாகவே முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், தான் கேட்ட தரவுகளை தர மறுத்ததாகவும், அங்கு விசாரணைக்கு சென்றபோது என்ன நடந்தது என்பது குறித்தும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் புகாருக்கு பிறகு இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயராஜும், பென்னீஸும் விடிய விடிய சாத்தான்குளம் காவல்நிலையத்தில் லத்தியால் தாக்கப்பட்டனர் என்பதை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

அதற்கு நேரடி சாட்சியாக 19ம் தேதி இரவு காவல் நிலையத்தில் தலைமை காவலர் ரேவதி இருந்துள்ளார். சக போலீஸாரின் நடவடிக்கைகளால் அதிர்ந்து போயிருந்தார் அவர். உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என மாஜிஸ்திரேட் உறுதி அளித்த பின்னர் தான் அவர் உண்மைகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் நியாயத்தின் பக்கம் நிற்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், உண்மையை தைரியமாக வெளிக்கொண்டு வர சாட்சி அளித்த தலைமை காவலர் ரேவதி ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

(இணையத்தில் பரவும் புகைப்படம்)

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரேவதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #Revathi என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஒரு புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. ஒரு குடிசை முன்பு பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர் ஸ்வீட் கொடுப்பது போன்று அந்த
புகைப்படம் உள்ளது. இது தான் சாத்தான்குளம் ரேவதி என பலரும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் குறித்து தகவல்
வெளியாகியுள்ளது.

(ஆந்திர காவலர் ரேவதி)

தற்போது பரவி வரும் புகைப்படம் 2017 முதலே இணையத்தில் பரவி வருகிறது. ஐஏஎஸ் டாப்பர் எனக்குறிப்பிடப்பட்டு பரவி வரும் இந்தப்புகைப்படத்தில் இருப்பவர் மதி வெங்கட ரேவதி. ஆந்திராவைச் சேர்ந்த இவர் 2017ம் ஆண்டு காவல் தேர்வில் வெற்றி பெற்று துணை ஆய்வாளராக பதவி பெற்றார்.

இவரின் புகைப்படம் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி என இணையத்தில் தவறாக பரவியது. 2017 முதல் கடந்த மாதம் வரை இந்த தவறான தகவல் பரவி வருகிறது. தற்போது அதே புகைப்படம், இவர் தான் சாத்தான்குளம் ரேவதி என பரவி வருகிறது.

எனவே தற்போது இணையத்தில் பரவி வரும் புகைப்படம் கர்நாடகாவில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்றவரும் இல்லை, சாத்தான்குளம் ரேவதியும் இல்லை. அவர் ஆந்திராவைச் சேர்ந்த காவலர் மதி வெங்கட ரேவதி ஆவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com