ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிறிஸ்தவர்களின் புண்ணியத்தலமாக விளங்கும் வேளாங்கண்ணியில் இன்று அதிகாலை ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது .
இதற்காக பேராலய கலை அரங்கில் நேற்றிரவு முதல் பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியபடி அனைவரும் சமாதானமாக இருக்கவும், வன்முறை முற்றிலுமாக ஒழிந்திட வேண்டும், அதேபோல், நடைபெற்றுவரும் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டியும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் ஈஸ்டர் சிறப்பு பிரார்தனை நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நிகழ்வுகள் தத்ருபமாக வடிவமைக்கப்பட்டு நடத்தி காட்டப்பட்டது. தொடர்ந்து இயேசு உயிர்தெழுந்து வருகிற காட்சியின்போது, வானவேடிக்கைகளும் நடைபெற்றது. தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனையும் நிறைவேற்றப்பட்டது.
இதில், பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் திவ்ய நற்கருணை ஆசிர் வர்ங்கப்பட்டது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.