பெண்கள் தலையில் இருந்த பூவை எடுக்க சொன்ன அதிகாரிகள்; எஸ்.ஐ தேர்வில் திடீர் கட்டுப்பாட்டால் பரபரப்பு
”பெண்கள் தலையில் பூ வைக்கக்கூடாது" என்று காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்தனர். இதனால், தேர்வு மையத்துக்கு வந்த மகளிர் தலையில் இருந்து பூக்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023-ம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இன்று பொது பிரிவினருக்கு தேர்வு நடைபெற்றது. நாளை காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது .
அதன்படி கடலூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வை 6 ஆயிரத்து 800 பேர் எழுதினர்.
சார்பு ஆய்வாளர் பணிக்காக காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொது எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத உள்ள தேர்வர்கள், சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். மேலும் அன்று மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழ் மொழிக்கான தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 2 மணிக்குள் இருக்க வேண்டும்.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, தேர்வு எழுத வந்த பெண்கள் சிலர் தலையில் பூச்சூடி வந்ததால், அதனை அதிகாரிகள் அகற்றினர்.
தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு நுழைவு சீட்டு கொண்டு வரவேண்டும். மேலும் தேர்வு எழுதவரும் தேர்வர்கள் அனைவரும் பந்துமுனை பேனா கொண்டுவர வேண்டும். இதை தவிர கைப்பை, செல்போன், புளுடூத் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை தேர்வு மையங்களுக்குள் கொண்டுவரக் கூடாது. நான்கு தேர்வு மையங்களிலும் மொத்தமாக எல்லோருக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் அனைத்து மையங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.