உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜோமேட்டோ, உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் நேரக் கட்டுப்பாடுகளுடன் உணவும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 38 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், வரும் 29 ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதில் " ஸ்விக்கி, ஜோமேட்டோ, உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்களின் மூலம், காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை உணவும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில் "கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி, பழ அங்காடிகளுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும். வாகனங்களுக்குக் கிருமி நாசினி தெளித்தல், சுமை தூக்கும் பணியாளர்கள் முறையாகப் பாதுகாப்பு, சுகாதார முறைகளை கடைப்பிடித்தல் போன்றவற்றைச் சென்னையில் மாநகராட்சி ஆணையரும் பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களும் ஒரு சிறப்புக் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும். மேலும், இந்த மார்க்கெட் பகுதிகளில் பொதுச் சுகாதாரம் பேணப்பட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்"
மேலும் "இத்தகைய கடுமையான சூழ்நிலையில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவை விநியோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். சமைக்கத் தேவைப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களைச் சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் வழங்கலாம். மாவட்ட நிர்வாகம், இவற்றுக்கென ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிரிவைத் தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த விரும்புவோரும், மருத்துவ உபகரணங்கள் வழங்க விரும்புவோரும், அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்தை அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவற்றுக்கென அந்தந்த மாவட்டத்தில் ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.