ஒலிபெருக்கிக்கு தடை கோரி வழக்கு: குமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
மத வழிபாட்டுத்தலங்களிலிருந்து 45 டெசிபலுக்கு அதிகமாக சப்தம் எழுப்பும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை நீக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடையுள்ள போதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதாக ஜார்ஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம் தலையிட்டு தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் என ஜார்ஜ் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கி அமர்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.