மதுரையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவளையபட்டியைச் சேர்ந்த வசந்தராஜா -கமலி மேகம் ஆகிய இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கமலி மேகத்திற்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை ஏற்க மறுத்த கமலி மேகம் தான் காதலித்த வசந்தராஜாவை பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 8ஆம் தேதி பழனியில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கமலி மேகத்தின் பெற்றோர் தரப்பிலிருந்து தொடர்ந்து இருவருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த காதல் தம்பதி உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். கமலி மேகத்தின் பெற்றோர் அரசியல் மற்றும் பண பலத்துடன் இருப்பதால் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதகவும், தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.
புகார் மனுவை பெற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.