சென்னை: இடிந்து விழும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு.. ஆபத்தில் 150 குடும்பங்கள்..!
தரமணி கானகம் பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1990-இல் 30 பிளாக்குகளில் 480 வீடுகள் கட்டப்பட்டன. வீடுகள் மிகவும் சேதமடைந்ததால், 2018-இல், பலர் வீடுகளை காலி செய்தனர். ஐ.ஐ.டி. வல்லுனர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், குடியிருப்பை ஆய்வு செய்து வசிக்க தகுதியற்ற குடியிருப்பு என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சான்று அளித்தனர்.
இதையடுத்து, 300-க்கும் மேற்பட்டோர் வீட்டை காலி செய்தனர். கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் புதிய குடியிருப்பு கட்ட, வாரியம் சார்பில் முடிவு செய்தது. இதற்காக, 2020 ஜூன் மாதம், 80 கோடி ரூபாய் ஒதுக்கி, புதிய குடியிருப்பில், 400 சதுர அடி பரப்பு வீதம், 500 வீடுகள் கட்ட முடிவானது. அந்த ஆண்டு டிசம்பரில் பணிகள் தொடங்க இருந்த நிலையில், எல்ஐஜி என்ற குறைந்த வருவாய் பிரிவினருக்கும் வீடு கட்டித்தர வேண்டும் என்று ஒரு நலச்சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தனர்.
மற்றொரு நலச்சங்கத்தினர் திட்டமிட்டபடி வீடு கட்டித்தர வேண்டும் என்று வாரியத்திடம் மனு கொடுத்தனர். எல்ஐஜி பிரிவினருக்கும் வீடுகளை கட்டித்தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் வீடு கட்டித்தருவதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.