”உச்சநீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் 30பேர் உயர் சாதியினர்; இடஒதுக்கீடு எங்கே?”-திருமாவளவன்

”உச்சநீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் 30பேர் உயர் சாதியினர்; இடஒதுக்கீடு எங்கே?”-திருமாவளவன்
”உச்சநீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் 30பேர் உயர் சாதியினர்; இடஒதுக்கீடு எங்கே?”-திருமாவளவன்
Published on

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை. 34 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகள் மட்டுமே விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்தவர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி திராவிடர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவை எனக் கோரி முழக்கம் எழுப்பப்பட்டது. இதையடுத்து மேடையில் பேசிய திருமாவளவன்,

”உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. தொடர்ந்து அநீதி நடக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34, அதில் 30 பேர் உயர் சாதியினர், 4 பேர் மட்டுமே விளிம்பு நிலை சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு முழுமையாக நிரப்புவது இல்லை” என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய முக்கியமானது. பாதுகாத்தால் மட்டுமே, இந்தியா முழுவதும் போராட முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய கி வீரமணி, ”இன்று நாம் போராடும் நிலை இருக்கிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இருக்கிறது, ஆனால் நீதித் துறையில் இட ஒதுக்கீடு தேவை என்பது மிக முக்கியமானது, ஏனென்றால் நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற துறைகள் எடுக்கும் முடிவுகளை சரியா தவறா என முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி பேசும்போது...

”பயங்கரவாத இயக்கங்களை தனித் தனியாக நடத்தி வரும் அமைப்பு ஆர்எஸ்எஸ். மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ், வேறு எந்த அமைப்பும் இப்படி தடை செய்யப்படவில்லை. வெடி மருந்துகளை பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் எம்பி-களாக ஆன வரலாறு உள்ளது.

இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் பேரணியால் மத கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் அதை தடை செய்ய அரசு முடிவு செய்கிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பு இவ்வாறு இருந்தால் விளைவுகள் ஏற்பட்டால் நீதிமன்றம் தான் பொறுப்பு என அரசு சொல்ல முடியுமா” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com