கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி 'ஜிப்மர்' மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியையடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவியொருவர், கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை பள்ளியின் தரைதளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து, மாணவி இறப்புக்கு நீதி கேட்டு 17ம் தேதி பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி முன் கலவரத்தில் ஈடுபட்டனர்.
மாணவி இறப்பு தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மாணவி உடல், கடந்த மாதம் 14ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பின் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் மற்றும் அரசு டாக்டர்கள் மூன்று பேர் கொண்ட குழு முன்னிலையில், கடந்த மாதம் 19ம் தேதி மறு பிரேத பரிசோதன செய்யப்பட்டது. இதன்பின் மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ய, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் குஷகுமார் சாஹா, தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் சித்தார்த் தாஸ், தடயவியல் துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.
நீதிமன்ற உத்தரவுபடி, புதுச்சேரி ஜிப்மர் குழுவிடம், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஒப்படைத்தனர். அதை ஆய்வு செய்த ஜிப்மர் குழுவினர் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்தனர். பின் அதற்கான அறிக்கையை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர். இதற்கிடையே, உயிரிழந்த மாணவியின் தோழிகள் இருவர் நேற்று விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.