பொது இடங்கள், சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்றி ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு முழுத் தடை விதிக்கக்கோரிய பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 58 ஆயிரத்து 172 கொடிக்கம்பங்களை அகற்றிவிட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மீதமுள்ள கம்பங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கொடிக்கம்பங்கள் அகற்றியது குறித்து 21 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை விரைந்து அகற்றி ஏப்ரல் 1ம் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.