’எத்தனை முறை சொல்வது’ - மதுபான கடை எதிர்ப்பு போராட்டத்தில் ஒன்று திரண்ட அரசியல் கட்சிகள்!

’எத்தனை முறை சொல்வது’ - மதுபான கடை எதிர்ப்பு போராட்டத்தில் ஒன்று திரண்ட அரசியல் கட்சிகள்!
’எத்தனை முறை சொல்வது’ - மதுபான கடை எதிர்ப்பு போராட்டத்தில் ஒன்று திரண்ட அரசியல் கட்சிகள்!
Published on

ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சியினர் போராட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேருந்து நிலையம் அருகே 12112 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் அருகே செயல்படும் இந்த கடையால் மாணவ, மாணவிகள், பெண்கள், முதியவர்கள், பயணிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த ஜூலை 22 ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பேச்சு வார்த்தை நடத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 15 அன்று கடை இடம் மாற்றம் செய்யப்படும் என எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர்.

ஆனால், உறுதியளித்தபடி கடை இடமாற்றம் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி கடந்த மாதம் 1 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தல் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு மாதத்திற்குள் கடை இடம் மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், அளித்த உறுதியை இரண்டாவது முறையாக அதிகாரிகள் மீறி விட்டதாக குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் இன்று காலை முதல் டாஸ்மாக் கடை எதிரே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டம் காரணமாக சேத்தூர் பேருந்து நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறை உதவி கண்காணிப்பாளர் சோமசுந்தரம், ஶ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன், ராஜபாளையம் டிஎஸ்பி ப்ரீத்தி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட கலால் துறை கோட்ட அலுவலர் ராஜாஉசேன், வரும் 16 ஆம் தேதிக்குள் கடை இடமாற்றம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டம் கை விடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com