தஞ்சாவூரில் நடைபெற்ற ஆக்ரோஷமான உரிமை போராட்டத்திலும் நடந்த மதநல்லிணக்க நிகழ்வு பார்ப்போரை நெகிழவைத்தது.
ஹிஜாப் உடை குறித்து நாடு முழுவதும் பல சர்ச்சைகள் வரும் நிலையில், கர்நாடக நீதிமன்றம் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது என்கின்ற நிலையில் நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் ஜனநாயக அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம் அருகில் டிஎன்டிஜே சார்பாக மாவட்ட தலைவர் ராஜிக்கு அகமது தலைமையிலும் மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டு மத்திய அரசு மற்றும் கர்நாடக நீதிமன்றத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதில் கலந்துகொண்ட பெண்கள் மூவண்ண கொடிகளை ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் அதிராம்பட்டினம் நகர்மன்றத் தலைவர் தாஹிரா அம்மாள் கரீம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ‘’அநீதி தீர்ப்பு’’ என்று எதிர்த்து கடும் கோபத்தில் கோஷமிட்டு கொண்டிருந்தபோது, அவ்வழியே முருகன் கோவிலுக்கு பால்குடம், காவடி தூக்கிகொண்டு இந்து சகோதரர்கள் ஊர்வலமாக வந்தனர்.
அதை புரிந்துகொண்ட மக்கள் கோஷம் போடுவதை சிறிது நேரம் நிறுத்தி மாற்று மதத்தவர்கள் ஊர்வலம் எளிதாக செல்ல மனித சங்கிலி அமைத்து அனுப்பிவைத்து உதவி செய்தனர். ஊர்வலம் கடந்துசென்ற பின்னர் உரிமை கோஷத்தை மீண்டும் தொடர்ந்தனர். தமிழ்நாடு எப்போதுமே மதநல்லிணக்க மாநிலம் என்பதை இது பறைசாற்றியது.