முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தவர்களை உச்சநீதிமன்றம் கடந்த 12.11.2022-ல் விடுதலை செய்தது. அதில் ஒருவரான சாந்தன் (55) திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அங்கு செல்ல அனுமதி வாங்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. சில தினங்களுக்கு முன்னரே அந்த அனுமதி மத்திய அரசிடமிருந்து அவருக்கு கிடைத்தது. இதனால் தீர்ப்பு வந்த நாள்முதலே முகாமில்தான் சாந்தன் தங்க வைக்கப்பட்டிருந்தார். இரண்டு நாளில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கடந்த பிப்ரவரி 24-ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் கல்லீரல் பிரச்னை காரணமாக அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னைக்கு மாற்றப்பபட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு இன்று (28.2.2024) அதிகாலை 4.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வந்தநிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார் சாந்தன். காலை 7:50 மணியளவில் அவர் உயிரிழந்ததாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.