வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வந்தனர். கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்தனர்.
இதையடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுத்தனர். தற்போது தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்வேறு தொழில்கள் வெளிமாநில தொழிலாளர்களை நம்பி இருக்கின்றன. இதனையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் தமிழகம் திரும்பலாம் என தொழில்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை கட்டணத்தை அந்தந்த தொழில் நிறுவனங்களே செலுத்த வேண்டும் எனவும் ஒருவருக்கு பாசிட்டிவ் என்று வந்தால் அவர்களுக்கான சிகிச்சை கட்டணத்தையும் அவர்களை அழைத்து வரும் தொழில் நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.