காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டு மாயமான இளைஞர்.. 3 வருடத்திற்கு பின் மீட்பு!

காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டு மாயமான இளைஞர்.. 3 வருடத்திற்கு பின் மீட்பு!
காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டு மாயமான இளைஞர்.. 3 வருடத்திற்கு பின் மீட்பு!
Published on

எம்.பி.ஏ படித்து விட்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த நபர் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி பகுதியில் சுற்றித் திரிந்தவரை சுற்றுலா வந்த அவரது உறவினர்கள் அடையாளம் கண்டு காவல் துறை உதவியுடன் மீட்டனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கன்னியாகுமரி பகுதியில சுற்றித் திரிந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை தென்காசி மாவட்டம் தென்மலை என்ற இடத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது மனநலம் பாதித்த நிலையில் அப்பகுதியில் அழுக்குத் துணியுடன், வருடக்கணக்காக வெட்டப்படாத சடைமுடியுடன் காணப்பட்ட நபரை கண்டதும் காணாமல் போன தமது உறவினராக இருக்குமோ என்ற சந்தேகமடைந்த முருகன், அவர் அருகில் சென்று பேச்சுக் கொடுத்துள்ளார்.

முதலில் பேச மறுத்த அவர், பின்னர் முருகனிடம் பேசத் துவங்கியுள்ளார். அவரது ஊர் மற்றும் பெயர் குறித்து விசாரித்ததில் அவர் சந்தேகம் அடைந்த அதே நபர் என தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் உதவியுடன் அவரை அருகில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை அடித்தனர். பின்னர் அவரை குளிக்க வைத்து புதிய ஆடைகளை வாங்கி அணிவித்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டு மூன்றாண்டுகளாக கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த நபர் தென்காசி மாவட்டம் தென்மலை என்ற இடத்தை சேர்ந்த முத்து (35) என்பது தெரியவந்தது. அவர், ராஜபாளையத்தில் பி.காம் பட்டப்படிப்பையும் அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். பின்னர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அதன் பின்பு ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சென்னை போலீசில் புகார் செய்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் உறவினர்கள் அவரை தேடும் முயற்சியை கைவிட்டனர்.

இந்த நிலையில்தான் நேற்று திடீரென கன்னியாகுமரியில் அவர் இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக கன்னியாகுமரி வந்தனர். பின்னர் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விவரங்களை தெரிவித்தனர். போலீசார் உரிய விசாரணைக்கு பின்னர் உறவினர்களுடன் அவரை அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com