திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், சமீப காலங்களில் தமிழக கோயில்களில் இருந்து சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு இருந்த புன்னைநல்லூர் சோழர்கால நடராஜர் வெண்கல சிலை உள்ளிட்ட 157 சிலைகள் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கோயில்களில் போதுமான பாதுகாப்பு இல்லாததே சிலை திருட்டுகளுக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், தற்போது கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், மனித பாதுகாப்பால் மட்டுமே இதுபோன்ற திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.