'ஜாதகம் சரியில்லை' பெண் கொடுக்க மறுப்பு: காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதலர்கள்

'ஜாதகம் சரியில்லை' பெண் கொடுக்க மறுப்பு: காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதலர்கள்
'ஜாதகம் சரியில்லை' பெண் கொடுக்க மறுப்பு: காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதலர்கள்
Published on

ஓமலூர் அருகே ஜாதகம் சரியில்லை என்று பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே; உள்ள வீசாரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். சேலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் இவர், மேட்டூர் தாலுகாவில் உள்ள பொட்டனேரி பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சிந்து பிரியாவை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களது காதல் இரண்டு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில், நந்தகுமார் தனது பெற்றோருடன், காதலி சிந்து பிரியா வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது நந்தகுமாருக்கு தோஷம் இருப்பதாகக் கூறி பெண் கொடுக்க, சிந்து பிரியாவின் பெற்றோர் மறுத்துள்ளனர்.

இதையடுத்து காதல் ஜோடியினர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் தாரமங்கலம் அருகேயுள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

தீவட்டிப்பட்டி போலீசார் இருவரது பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசினர். ஆனால், சிந்து பிரியாவின் பெற்றோர், திருமணத்தை ஏற்றுகொள்ள மறுத்தனர். அப்போது போலீசார் தரப்பில் இருவரும் திருமண வயதை எட்டிய காரணத்தால் சிந்து பிரியாவின் விருப்பப்படி நந்தகுமாருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இருவரது கிராமத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com