தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கான முகாம்களில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுரிமை இல்லாமலும், இந்தியக் குடியுரிமை இல்லாமலும் தவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய அரசு, இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையும், ஓட்டுரிமையையும் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கையில் போர் நடந்த காலங்களில், இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட தமிழர்கள் தாய் மண்ணான தமிழ்நாட்டுக்கு அகதிகளாக திரும்பிவந்தனர். இவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசுகள், தமிழகம் முழுவதும் அகதிகளுக்காக 114 முகாம்களை திறந்தன. இவற்றில் தற்போது சுமார் ஒரு லட்சம் நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் கொட்டப்பட்டு, துவாக்குடி வாழவந்தான் கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் தலா 500 குடும்பங்கள் உள்ளன. இதில் 4,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடங்கி, ஆதார் கார்டு, பேன் கார்டு, மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ரேஷன் பொருள்கள், பொங்கல் பரிசு தொகுப்பு, மாதாந்திர உதவித்தொகை என இந்திய குடிமகனுக்கு கிடைக்கும் அனைத்தையும் அரசு வழங்கி வருகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த அகதிகளின் குடும்பத் தலைவருக்கு தலா ரூ750-ம், குடும்பத்தலைவிக்கு தலா ரூ1000-ம், பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால் தலா ரூ.400 என மாதந்திர உதவித்தொகையை அரசு வழங்கிவருகிறது. இப்படியாக 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
இத்தகைய முகாம்களில் பிறந்த நான்காம் தலைமுறை குழந்தைகளும் அகதிகளாக வாழ்கின்றனர். இங்கு வாழும் பெண்கள், இந்தியாவில் உள்ள ஆண்களை திருமணம் செய்துக்கொள்ளும்போது இந்திய குடியுரிமை பெறுகிறார்கள். இங்குள்ள ஆண்கள், இந்திய பெண்ணை திருமணம் செய்யும்போது இந்தியக் குடியுரிமையை பெற முடிவதில்லை.
இந்தியக் குடியுரிமை இல்லாததால் அகதிகள் தங்களது பெயரில் சொந்தமாக இந்தியாவில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்க முடிவதில்லை. கல்வி உதவித்தொகை கிடையாது. சாதி சான்றிதழ், அரசு வேலை கிடையாது. இவர்களுக்கான வாகன ஓட்டுநர் உரிமத்தைக் கூட அரசு வாழங்குவதில்லை. இப்படியாக அகதிகளுக்கான முகாம்களில் கூண்டு கிளிகளாக அடைபட்டுள்ளனர்.
இவர்கள் கூலி வேலைகளுக்கு மட்டுமே செல்ல முடிகிறது. ஒவ்வொரு நாளும் இரவு முகாமில் வந்து தங்கிவிட வேண்டுமென அரசு நிர்பந்திக்கிறது. இதனால் வெளியூர்களுக்கு வேலைக்காகவோ, உறவினர்களை பார்ப்பதற்காகவோ செல்ல முடிவதில்லை. ஒருநாள் இரவு வெளியூர்களில் தங்குவது என்றாலும், அதிகாரிகளிடம் அனுமதி பெரவேண்டும் என்ற நிலை இருக்கிறது.
"எங்களுக்கு ஓட்டு போடும் உரிமையும் இல்லை, எங்களிடம் யாரும் ஓட்டு கேட்டு வருவதுமில்லை" என்று ஏக்கத்தோடு கூறுகிறார்கள், இங்கே பறக்க மறந்த கூண்டுக் கிளிகள்போல அகதிகளாக வாழும் தமிழர்கள்.
- லெனின்