ஸ்ரீபெரும்புதூர் அருகே இரும்புக்கடையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் முத்து என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்குள் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீபெரும்புதூர் உதவி கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான போலீசார் முத்துவின் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கே மறைமுகமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடை கொண்ட செம்மர கட்டைகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து கடையின் உரிமையாளர் முத்துவை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் 300 கிலோ எடை கொண்ட ஆறு செம்மரக் கட்டைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் செம்மரக் கட்டை கடத்தலில் தொடர்பு உடைய மற்ற நபர்களையும் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் அனைத்தும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்குமென வன அதிகாரிகள் தெரிவித்தனர்.