தெப்பக்காட்டில் வளர்ப்பு யானை மசினி தனது பாகனை தாக்கி கொன்றுள்ளது. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டும் திருச்சி, சமயபுரத்தில் வைத்து மசினி தன் பாகனை கொன்றது குறிப்பிடத்தக்கது. தெப்பக்காட்டில் சாதுவாக இருந்த மசினி யானையின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? பார்க்கலாம்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி பகுதியில், கடந்த 2007 ஆம் ஆண்டு தாயை பிரிந்த நிலையில் மூன்று மாதக்குட்டியாக வைக்கப்பட்டது மசினி யானை. உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அந்த யானையை, முகாமில் வைத்து வனத்துறையினர் பராமரிக்க துவங்கினர். வனத்துறையினரின் தீவிர முயற்சி காரணமாக யானை உடல் நிலை தேறியது. தொடர்ந்து முகாமில் அந்த யானைக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. முகாமில் உள்ள விநாயகர் கோவிலில் மசினி யானை மணி அடித்து விநாயகரை வழிபடும் காட்சிகளை காண அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அப்படித்தான் மசினி யானையும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலம் ஆனது.
மசினி யானை மணி அடித்து, இறைவனை வழிபடும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் அடிக்கடி வெளியான நிலையில், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அதனை திருச்சி, சமயபுரம் கோவிலுக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு வன உயிரின ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மசினி திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தெப்பக்காட்டில் வன சூழலில் வாழ்ந்த மசினி யானை திருச்சி கொண்டு செல்லப்பட்டால் அதன் வாழ்விட சூழல் மாறும், யானை சிரமப்படும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் அனைவரின் எதிர்ப்பையும் மீறி யானை திருச்சி கொண்டு செல்லப்பட்டு கோவிலில் பராமரிக்கப்பட்டது. மசினி யானை கோவிலில் பராமரிக்கப்பட்டு வந்தபோது அதன் குணங்களில் மாறுபாடுகள் ஏற்பட்டன. திருச்சியில் வைத்து தன் பாகனை தாக்குவதற்கும் மசினி முயன்றதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சமயபுரம் கோவிலில் வைத்து பாகன் கஜேந்திரனை மசினி யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மசினி யானைக்கு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அது தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டது. யானையின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அதனை மீண்டும் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டு செல்லக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மசினி யானையை மீண்டும் தெப்பக்காடு கொண்டு செல்ல உத்தரவிட்டனர். அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மசினி யானை மீண்டும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.
உடலில் பலத்த காயங்களுடன், உடல்நிலை மோசமான நிலையில் மசினி தெப்பக்காடு வந்து சேர்ந்தது. வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு மசினி யானைக்கு பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர். அதன் பலனாக மசினி யானை உடல் நலம் தேறியது.
தொடர்ந்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி யானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் குணங்களில் மாறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகாமில் பராமரிக்கப்படும் இந்திரா என்கின்ற யானையை பராமரித்து வந்த பாலன், மசினி யானையை பராமரிக்க பணியமர்த்தப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மசினி யானை தனது இந்த பாகனையும் தாக்க முயன்றதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் யானையை அதன் பாகன் நல்ல முறையில் பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல பாகன் பாலன், மசினி யானைக்கு உணவுகளை வழங்கி இருக்கிறார். தொடர்ந்து வளர்ப்பு யானையின் கால்களில் மாற்றப்படும் பேடி எனப்படும் சங்கிலியை அவர் கட்ட முயன்றபோது மசினி யானை அவரை தாக்கி இருக்கிறது. யானையின் கால்களுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பாகனை, மசினி தலையில் மிதித்து காயப்படுத்தி இருக்கிறது. அருகில் இருந்த சக பாகன்கள் மசினியிடம் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பாலனை மீட்டிருக்கிறார்கள். தொடர்ந்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அரசு மருத்துவமனைக்கு சென்ற முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் பாகனை கொன்ற மசினி யானையை சக யானை பாகன்கள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். யானை மன உளைச்சலில் இருப்பதாகவும், கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து அதனை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இதனிடையே அரசு பணியில் இருக்கும்போது உயிரிழந்த பாகன் பாலன் குடும்பத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், அவரது மகன் வெற்றி தற்காலிக திறப்பு காவலராக பணியாற்றி வரும் நிலையில் அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.